சென்னை: தலைநகர் சென்னையில் குடும்பத் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வீட்டுத் தனிமையில் இருக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
கிருமிப் பாதிப்புக்கு ஆளா வோரை 14 நாள்கள் வரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கும்படியும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் கொவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கம் ஒருபுறம் தணிந்து வரும் நிலையில், மறுபுறம் மூன்றாவது அலையால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு மக்களிடம் இருந்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாகவே இக்கிருமிப் பாதிப்பு சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தில் மூவர் முதல் ஐவர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, வீட்டுத் தனிமைக்கு பதிலாக அனைவரையும் 14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளதாக தினமலர் ஊடகத் தகவல் கூறியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 270 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 8,467 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 5 லட்சத்து 38 ஆயிரத்து 745 பேர் குணமடைந்து, 2,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 186 பேர் பாதிக்கப்பட்டு, மூவர் உயிரிழந்துள்ளனர்.
சந்தைக்குச் ெசல்வோர், குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்போரிடம் இப்பாதிப்பு அதிகம் தென்படுகிறது. அவர்கள் வீட்டுத் தனிமையில் இருக்கும்போது மற்ற குடும்ப உறுப்பினர்களும் தொற்றால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
ஒரு தெருவில் மூவருக்கும் மேல் தொற்று இருந்தால் அத்தெரு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதுபோல் சென்னையில் 110 தெருக்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளன.
வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில்லை என்ற காரணத்தாலேயே மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.