அனுமதியற்ற ஒலிபெருக்கி பறிமுதல்
மும்பை: வரும் அக்டோபர் மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி ஒன்பது மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் பிரசார வாகனங்களில் காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
பொதுக்கூட்டத்தில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த போலிசாரிடம் எழுத்துபூர்வ அனுமதியைப் பெறவேண்டும். இதுபோல் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
கட்டடச் சுவரில் விளம்பரம் செய்யக்கூடாது, சுவரொட்டிகள், கட்-அவுட்கள், விளம்பரப் பலகைகள், கொடிகள் வைக்க அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
அடுத்த தேர்தல்: 4 மாதம் அவகாசம்
புதுடெல்லி: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நான்கு மாதகால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் தேர்தல் ஏற்பாடுகளையும் செய்யவேண்டி இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க ஏழு மாத அவகாசம் வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரியது.
காற்றாலை முறிந்து விழுந்து எரிந்தது
நெல்லை பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தில் காற்றின் வேகம் காரணமாக தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 600 கிலோவாட் திறன் கொண்ட காற்றாலை முறிந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். படம்: ஊடகம்
ரூ.50,000 நிதியுதவி வழங்க உத்தரவு
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவால் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ.50,000 நிதி உதவியை வழங்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலா்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலா் ஆஷிஷ் குமாா் சிங் கடிதம் அனுப்பியுள்ளாா்.
"கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தலா ரூ.50,000 உதவித் தொகையை தொற்று ஏற்பட்ட நாள் முதல் இப்போது வரை மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து மாநில அரசுகள் வழங்கவேண்டும்," என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
கோவை: தமிழகத்தில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொய்வு அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக உள்ளதாகவும் இப்பணியில் பின்தங்கியுள்ள 13 மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் வேகத்தை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

