முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 1,240 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்
சேலம்: தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட 'வருமுன் காப்போம்' திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் வழி மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் 1,240 இடங்களில் முகாம்களை நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
'வருமுன் காப்போம்' திட்டமானது கடந்த 2006ஆம் ஆண்டு, அன்றைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. அச்சமயம் மாநிலம் முழுவதும் அத்திட்டம் பரவலாகச் செயல்படுத்தப்பட்டது.
எனினும் பின்னர் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் முடங்கியது. சுமார் பத்தாண்டுக் கால ஆட்சியில் இத்திட்டத்துக்கு என நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை.
இது தொடர்பாக திமுக பலமுறை கண்டனம் தெரிவித்த போதிலும் 'வருமுன் காப்போம்' திட்டத்தைச் செயல்படுத்துவதில் அதிமுக அரசு ஆர்வம் காட்டவில்லை.
இதையடுத்து மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அக்கட்சித் தலைமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அண்மைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது மருத்துவத்துறை சார்பில் 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன.
அவற்றுள் முக்கியமாக 'வருமுன் காப்போம்' திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர், சித்த மருத்துவர் உட்பட 16 சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முகாம்களுக்கு வரும் பொது மக்களுக்கு உள்ள உடல் கோளாறுகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும் என்றும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கு உயர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் 1,240 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

