சென்னை: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் அவரது கணவர் உட்பட மேலும் இருவருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது.
கடந்த 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை தமிழக சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் இந்திரகுமாரி. அப்போது அதிமுக ஆட்சியில் செல்வாக்கு மிக்க அமைச்சராகவும் இருந்தார்.
இந்நிலையில், அவரது கணவர் பாபு நடத்தி வந்த மாற்றுத் திறனாளிகள் அறக்கட்டளைக்கு அரசு ஒதுக்கிய தொகையில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அரசு ரூ.15.45 லட்சம் ஒதுக்கிய நிலையில், பாபு நடத்தி வந்த அறக்கட்டளை மூலம் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டதை இந்திரகுமாரி மறுத்தார்.
இதையடுத்து அவர் மீது ஊழல் வழக்குப் பதிவானது. அவரது கணவர் உட்பட மேலும் சிலரும் இதில் சேர்க்கப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றது.
நீண்டகாலமாக நீடித்த இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திரகுமாரிக்கும் அவரது கணவர் பாபுவுக்கும் தலா ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், முன்னாள் அரசு அதிகாரி சண்முகத்திற்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
இந்திரகுமாரி, தற்போது திமுகவில் மாநில இலக்கிய அணிச் செயலாளராகப் பொறுப்பில் உள்ளார். தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

