சென்னை: துபாயில் இருந்து கைபேசி, மடிக்கணினி 'மின்னூட்டிகள்' (சார்ஜர்) மூலம் தங்கம் கடத்தி வந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து ரூ.58 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் விழிப்புடன் இருந்தனர்.
நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்த இரு பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் வெளியே செல்வதில் முனைப்பாக இருந்ததைஅடுத்து சந்தேகம் வலுத்தது.
இருவரையும் தடுத்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர்களது உடைமைகள் பரிசோதிக்கப்பட்டன.
அப்போது, இருவரும் ஏராளமான கைபேசிகள், மடிக்கணினிகளைக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. அவற்றுக்கான மின்னூட்டிகளும் அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்து அவற்றைச் சோதித்தனர்.
அப்போது அவற்றில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 1.38 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

