நவம்பர் முதல் தேதியில் இருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்புகள் தொடக்கம்
சென்னை: தமிழகம் முழுவதும் நவம்பர் முதல் தேதியில் இருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துகள் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிதாக மேலும் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 17,231 பேர் தொற்றுப் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாஜக வளர்ச்சிக்கு ஊடகங்கள் தேவை என்கிறார் அண்ணாமலை
சென்னை: தமிழக பாஜக வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் மீது பாஜக மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா அண்மையில் செய்தியாளர்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாகி உள்ளது. செய்தியாளர்கள் அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகங்களும் பத்திரிகைகளும் திகழ்கின்றன என்றும் இதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நசுக்கும் போலிசார்: திருமா புகார்
சேலம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நசுக்கும் காவல்துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது என அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். "தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஒடுக்குவதில்தான் காவல்துறையினர் முனைப்பாக உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகள், சாதி சங்கங்கள், ரசிகர் மன்றங்களின் கொடிகள் பறக்கும்போது, சேலத்தில் விசிக கொடியை மட்டும் ஏற்ற அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது," என்றார் திருமாவளவன்.
இறந்துபோன தாய்க்கு கோவில் கட்டி, சிலை வைத்து வழிபடும் பிள்ளைகள்
சென்னை: இறந்துபோன தாயாருக்கு அவரது பனிரெண்டு பிள்ளைகளும் சேர்ந்து கோவில் கட்டி வழிபடுகின்றனர். சென்னையைச் சேர்ந்த 85 வயதான சிவகலை அண்மையில் காலமானார். அவருக்கு பத்து மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த சிவகலை, குழந்தைகளை சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கினார். அண்மையில் இவரது 12ஆவது மகன் கொரோனா தொற்றுக்குப் பலியானதால் சோகத்தில் மூழ்கி இருந்தார் சிவகலை. இந்நிலையில் அவரும் அண்மையில் காலமானார். இதையடுத்து அவரது மகன்கள், மகள்களுடன் பேரன் பேத்திகளும் சேர்ந்து அவருக்கு கோவில் கட்டியுள்ளனர். அங்கு அவரது உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரது நினைவு தினத்தையடுத்து நேற்று முன்தினம் அவரது சிலைக்கு சிறப்பு பூசை நடத்தப்பட்டது. இதன் மூலம் பெற்ற தாயை இழந்த சோகத்தைக் குறைத்துக் கொள்ள முடிகிறது என சிவகலையின் மகள்களில் ஒருவர் கூறுகிறார்.
கைபேசியில் பேசுவதைக் கண்டித்த கணவரை கத்தியால் குத்திய மனைவி
சேலம்: விடிய விடிய கைபேசியில் பேசியதால் கண்டித்த கணவரை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடியை அடுத்துள்ள காட்டூரைச் சேர்ந்த 32 வயதான ஒப்பனைக் கலைஞர் பாலமுருகனின் மனைவியான 26 வயது இலக்கியா தினமும் பல மணி நேரம் இடைவிடாமல் கைபேசியில் பலருடன் பேசி வந்துள்ளார். இதை பாலமுருகன் கண்டித்ததால் சில மாதங்களுக்கு முன்பு ஏழு வயது மகளுடன் இலக்கியா பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார். அண்மையில்தான் மனைவியைச் சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த தொடங்கினார் பாலமுருகன். இந்நிலையில் மனைவியின் போக்கில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பது அறிந்து வருத்தமடைந்த அவர், நேற்று முன்தினம் மனைவி இலக்கியாவுக்கு அறிவுரை கூறியதாகத் தெரிகிறது. ஆனால் கணவன் மீது ஆத்திரமடைந்த இலக்கியா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தினார். இதில் படுகாயமடைந்த பாலமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏழு வயதுக் குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இலக்கியா. இவர் தன் கணவர் கொடுமைப்படுத்தியதாகப் புகார் அளித்துள்ளார்.

