செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
29c81bd3-19f7-43f0-bc28-f88d810551d1
-

50 பேரின் வீடுகளில் சோதனை

புதுடெல்லி: 'நாகை மீனவன்' என்ற யூடியூப் ஒளிவழியை நடத்தி வந்தவர்களின் வீடுகளில் கடந்த இரு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் மடிக்கணினிகள், கேமரா உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அண்மையில் கீச்சாங்குப்பம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக படகு ஒன்றில் ஏற்றிக்கொண்டு இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 280 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, படகை விட்டு தப்பியோடியவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்தப் படகு 'நாகை மீனவன்' என்ற யூடியூப் ஒளிவழியை நடத்தி வந்த குணசீலன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்ததை அடுத்து, அவரது நண்பர்கள் 50 பேரின் வீடுகளில் சுங்கத் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.

'ஜெயலலிதாவின் சிலை முறையாகப் பராமரிக்கப்படவில்லை'

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பது அடி உயர வெண்கலச் சிலை முறையாகப் பராமரிக்கப்படவில்லை எனவும் அது பறவைகளின் கூடாரமாக மாறிவிட்டது எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.

"ஜெயலலிதாவைக் கௌரவிக்கும் வகையில் அவரது சிலை இந்தாண்டு ஜனவரி 28ல் திறக்கப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலையை ஒழுங்காக பராமரிக்காத சூழல் உள்ளது. இவ்விஷயத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு, ஜெயலலிதா சிலையைப் பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையேல், சிலை பராமரிப்பை அதிமுகவிடமே ஒப்படைக்கவேண்டும்," என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும்படி மத்திய உள்துறை செயலாளர் கடிதம்

புதுடெல்லி: தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைக் காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருவிழாக்கள், கூட்டங்கள், சமய நிகழ்வுகள் போன்றவற்றின் மூலம் மக்கள் கூட்டம் அதிகரித்தால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து பின்னர் கட்டுப்படுத்துவது சவாலாக மாறிவிடும் என்பதால் முன்னேற்பாடாக இப்போது முதலே கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். பண்டிகை நாட்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறும் மாணவா்கள் குறித்து 60 குழுவினர் காணொளிப் பதிவு

சென்னை: சென்னையில் பொது இடங்களில் வரம்பை மீறும் கல்லூரி மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்கள் எல்லை மீறும் சம்பவங்களைக் காெணாளிக் காட்சிகளாகப் பதிவு செய்யும் வகையில் 60 குழுவினர் சென்னை காவல்துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர், அரசுப் பேருந்துகளில் செல்லும் மாணவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தங்களிடம் உள்ள அதிநவீன கேமராக்களில் பதிவு செய்வர். இதற்காக காவல்நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 'வைஃபை கேமரா'வைப் பயன்படுத்தும்படி ஆய்வாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்