சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாள்களே உள்ள நிலையில், காலை முதல் மாலை வரை அனல் பறக்கும் பிரசாரம் ஓயாமல் தொடர்ந்து வருகிறது.
ஒரு பக்கத்தில் ஆளுங்கட்சி வேட்பாளர்களும் மற்றொரு பக்கத் தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களும் தங்களது கட்சியினரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சி புரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த அக்டோபர் மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும் வெற்றிக்கான வியூகத்துடன் பிரசாரம் செய்து வருகின்றன.
"திமுக ஆட்சியின் திட்டங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்," என்று தென்காசியில் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திரிசூலம், பொழிச்சலூரில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் தங்களது வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கு ஏதுவாக வாக்கு சேகரித்தனர்.
சுயேட்சை வேட்பாளர்களும் துண்டுப் பிரசுரங்களை வீடுவீடாக வழங்கி வாக்கு கேட்டு வருவதாக மாலை மலர் ஊடகம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
"உள்ளாட்சி அமைப்பு என்பது மிகவும் பலம் பொருந்தியது. மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்வதற்கு இந்த அமைப்புகள் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது," என்றார்.
இதற்கிடையே, பதற்றமான வாக்குச்சாவடிகளில் இரு மடங்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தேர்தலில் 40,000 போலி சாரும் ஊர்க்காவல் படையினரும் வாக்குப்பதிவு சமயத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

