சென்னை: தமிழகம் எங்கும் இயங்கும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி லட்சம்லட்சமாக பணத்தைக் கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் பலரும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.
லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் கடந்த மூன்று மாத காலமாக பல அலுவலகங்களில் சோதனை நடப்பதாகவும் அதன் உச்சகட்டமாக வியாழக்கிழமை ஒரே நேரத்தில் அதிகாரிகள் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் படை எடுத்ததாகவும் ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன.
சென்னை திருவான்மியூர், தாம்பரம், பெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அதிகாரிகள் படை நுழைந்தது.
விழுப்புரம் டாஸ்மாக் மண்டல அலுவலகம் மூன்று மணி நேரம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அங்கு கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பறிமுதலானதை அடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.
மதுரை திருமங்கலம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரூ.52,000 பணம் சிக்கியதை அடுத்து அழகர்சாமி, 58 என்ற அதிகாரி சிக்கிய தாகத் தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தில் சோதனை நடந்தபோது தரகர்கள் தப்பி ஓட முயன்று கடைசியில் போலிசிடம் பிடிபட்டனர்.
சன்னல்களுக்கு வெளியே தரகர்களும் அலுவலர்களும் வீசி எறிந்த பணம், ஆர்சி புத்தகம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
கணக்கில் வராத ரூ.118,950 பறிமுதல் செய்யப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர் மற்றும் தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், திருச்சி மாவட்டம் மணப்பாறை மாகாளிப்பட்டியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அலுவலகம் ஆகியவையும் தப்பவில்லை.
அறந்தாங்கி சார்பதிவாளர் அலுவலகம், சிதம்பரத்தில் மாவட்ட கல்வி அலுவலகம், கர்நாடக எல்லையை ஒட்டி ஓசூர் ஜுஜுவாடியில் உள்ள ஆர்டிஓ உள்வழி சோதனைச்சாவடியிலும் சோதனை நடந்தது.
தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி அலுவலகம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சில்லாங்காட்டில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றில் அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் லட்சக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து விசாரணை முழு மூச்சில் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

