சென்னை: காவலில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் பணத்தை இழப்பீடாக வழங்கும்படி தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த சொக்கி என்பவரின் மகன் கதிரவன். ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2013ஆம் ஆண்டு வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாா்.
அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, வீட்டை விட்டு வெளியே சென்ற அவரை மதுர வாயல் காவல் நிலைய காவலா்கள் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன்பிறகு, கதிரவன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மகனைக் காண சொக்கி மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே கதிரவன் இறந்துவிட்டதாக தகவல் சொல்லியுள்ளனர்.
இதையடுத்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்று அடித்துத் தாக்கி சித்திரவதை செய்ததால்தான் தனது மகன் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சொக்கி புகாா் அளித்தாா்.
இப்புகாரை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் துரை ஜெயச்சந்திரன், கதிரவனின் உடலில் காயம் எப்படி ஏற்பட்டது என்பதை காவலா்களால் நிரூபிக்க முடியவில்லை என்றும் குடிபோதை யில் இருந்தவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று சித்திரவதை செய்ததால்தான் அவா் இறந்து இருக்கிறாா் என்பதால் அவரது குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டாா்.
அத்துடன், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜெயக்குமாா் ஓய்வு பெற்றுவிட்டதாலும் ஏட்டு ரவீந்திரன் மரணமடைந்துவிட்டதாலும் மற்ற இருவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தாா்.