செய்திக்கொத்து

2 mins read
969b12e0-3ae1-499d-b8bf-021543ed61b3
-

சந்தனமரக் கட்டைகள் வைத்திருந்த வெங்கடாசலம் மீது வழக்குப் பதிவு

சேலம்: சட்டத்துக்குப் புறம்பாக சந்தன மரக் கட்டைகளை வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24ஆம் தேதி ­சேலம் மாவட்­டம், ஆத்­தூர் அருகே அம்­மம்­பாளை­யத்­தில் உள்ள வெங்­க­டா­ச­லத்­தின் வீடு, அலு­வ­ல­கம் உள்ளிட்ட 11 இடங்­களில் லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பணம், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தனப் பொருட்களுடன் சந்தன மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சந்தன மரப் பொருட்கள் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் வெங்கடாசலம் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு மட்டுமே மதுபானம் விற்பனை

விருதுநகர்: கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர் களுக்கு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

"கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதற்கான குறுஞ்செய்தியை விருதுநகர் மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகளில் வாடிக்கையாளர்கள் காண்பிக்கவேண்டும். அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்திய பின்னரே மதுபானங்களை விற்பனையாளர்கள் வழங்கவேண்டும்," என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புலியைக் கொல்வதை எதிர்த்து

நொய்டாவைச் சேர்ந்த பெண் வழக்கு

நீலகிரி: நீலகிரி மாவட்டம், மசினகுடி வனப்பகுதியில் உலவும் புலியைச் சுட்டுக்கொல்ல பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா கோக்ரா என்ற பெண் இணையம் வழி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். குறிப்பிட்ட அந்தப் புலி ஆட்கொல்லி புலி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்தப் புலியைச் சுட்டுக்கொல்லக்கூடாது என்றும் சங்கீதா கோக்ரா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

'மறுவாழ்வு அளிக்கவேண்டும்'

சென்னை: மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேநேரத்தில், கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் புலியைக் கொல்வதும் ஏற்புைடயது அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இவரைப் போலவே சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனும் நால்வரைக் கொன்றுள்ள புலியைப் பிடித்து மறுவாழ்வு அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.