சென்னை: பட்டுப்புடவைகள் உள்ள பார்சல்கள் மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் போதைப்பொருள் கடத்திய சென்னையைச் சேர்ந்த ஆடவர் கைதானார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள் மீண்டும் சென்னை வந்தடைந்தது.
அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது ஆஸ்திரேலியா செல்லவிருந்த சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்ட அனைத்து உறைகள், பார்சல்களையும் திறந்து பார்த்தனர். இதில் பட்டுப்புடவைகள் அடங்கிய பெரிய பார்சல் உறைகளைப் பிரித்துப் பார்த்தபோது, புடவைகளுக்கு மத்தியில் எட்டு கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.
ஆஸ்திரேலியாவுக்குப் புடவைகளை அனுப்ப இருந்த நிறுவனத்தாரை விசாரித்தபோது, காரைக்காலில் இயங்கும் கூரியர் நிறுவனம்தான் புடவை அனுப்பி வைத்ததாகத் தெரிவித்தனர். அதிகாரிகள் அந்நிறுவனத்தில் விசாரித்தபோது சென்னையச் சேர்ந்த ஒருவர்தான் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ளார் என்பது தெரியவந்தது.
அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணையின்போது, ஏற்கெனவே குறிப்பிட்ட வகை போதைப்பொருளை, பட்டுப்புடவை உறைகளுக்குள் வைத்து, சரக்கு விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தூதரக அதிகாரிகளின் உதவியோடு, அங்குள்ள விமான நிலையத்திலேயே சுமார் 12 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.2 கோடி என்றும் வேறொரு சரக்கு விமானம் மூலம் அது சென்னைக்கு அனுப்பப்பட்டதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

