மதுரை: குற்றச்செயலைத் தடுக்கும் விதமாக மாவட்ட காவல்துறையினர் முன்னாள் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் 'இனி எந்தக் குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டேன்' என உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர்.
இவர்மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து, போலிஸ் துணை அதிகாரி பாஸ்கரன் கூறுகையில், "மாவட்டத்தில் 50 பேரிடம் உறுதி மொழிப் பத்திரம் வாங்க உள்ளோம். அவர்களில் ஒருவர்தான் செல்வம். இது வரை 27 பேரிடம் வாங்கியுள் ளோம். தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்படுவர்,'' என்றார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், அண்மையில் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ரவுடிகளின் வீடுகளில் போலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். நுாற்றுக்கணக்கான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து சோதனை நடந்துவரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் இதுவரை 313 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வரிச்சியூர் செல்வத்திடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கினர்.
இதற்குப் பிறகும் அவர் சிறு குற்றச்செயலில் ஈடுபட்டாலும்கூட கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு வெளியில் பிணையில் வரமுடியாதபடி சிறையில் அடைக்கப்படுவார் என போலிசார் கூறியுள்ளனர்.

