இன்று வாக்கு எண்ணிக்கை: காத்திருக்கும் கட்சிகள்
சென்னை: தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது.
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்குப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மொத்தம் சுமார் 24 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. எண்பது ஆயிரத்துக்கும் அதிகமானோர் களம் கண்டனர்.
முதல் கட்ட தேர்தலில் 77.43% வாக்குகளும் 9ஆம் தேதி நடந்த இரண்டாவது கட்ட தேர்தலில் 78.47% வாக்குகளும் பதிவாகின.
மொத்தம் 74 மையங்களில் இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெறும். ஒன்பது மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகள், பள்ளிகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்படவில்லை. மாறாக பழைய முறைப்படி வாக்குச்சீட்டுகள் கொண்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. எனவே தேர்தல் முடிவுகளை வெளியிட தாமதமாகும் எனத் தெரிகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்துள்ள திமுகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் நீடிக்கிறதா அல்லது அதிமுக மீதான அதிருப்தி குறைந்துள்ளதா என்பது இதன் மூலம் தெரியவரும் என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.
வாக்கு எண்ணப்படும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்கும் வகையில் சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பதற்றம் உள்ள பகுதிகளில் கூடுதல் போலிசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 4,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.
வாக்கு எண்ணும் மையங்களில் ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிரடிப்படை போலிசாரும் தயார் நிலையில் உள்ளனர்.
"முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர். கொரோனா விவகாரத்தையும் தமிழக அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. எனவே வெற்றி நிச்சயம்," என திமுக தரப்பில் கூறப்படுகிறது.
ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம் என்றும் உள்ளாட்சித் தேர்தலில் அவ்வாறு நிகழாது என்றும் அதிமுக கூறியுள்ளது. இதர கட்சிகளும் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன.
தேர்தல் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் திமுக ஆட்சிக்கு எந்தச் சிக்கலும் எழாது. எனினும் பிற கட்சிகளின் நிலை குறித்து இன்று விவரம் தெரியவரக்கூடும்.

