செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8f429e7d-1082-4e4f-99ed-d07652c2ec19
-

தமிழிசை: அரசு கோவில்களைத் திறப்பது குறித்து பரிசீலிக்கலாம்

மதுரை: தமிழக அரசு கோவில்களைத் திறப்பது குறித்து மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து கூறியுள்ளார்.

"புதுச்சேரியில் அனைத்து கோவில்களும் திறந்துதான் உள்ளன. எனவே, தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் தனது முடிவை மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும். மதுரை தெப்பக்குளம் சென்றால் மாரியம்மனை வழிபடாமல் சென்றது இல்லை. ஆனால், இப்போது மதுரைக்கு வந்தும் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்குச் செல்ல முடியவில்லையே என வருத்தமாக உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு ஆயத்தமாகும் மக்கள்; காற்றில் பறக்கும் விதிமுறைகள்

சென்னை: தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக மக்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள துணிக்கடைகளில் குவிந்து வருகின்றனர். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்திருப்பது உள்ளிட்ட கொரோனா விதிகளையும் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை.

50% வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்கவேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ள நிலையில், எந்தக் கடையும் இவ்விதிமுறையைப் பின்பற்றுவதாக தெரியவில்லை என்றும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு

மின்வாரியப் பணி

சென்னை: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், கலப்புத் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள் சுபா, தனலட்சுமி ஆகியோருக்கு மின்வாரியத்தில் விளையாட்டு அலுவலர் பணி நியமன ஆணைகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உடனிருந்தனர்.

வருமுன் காப்போம் திட்டம் தொடங்கியது

சென்னை: கலைஞரின் 'வருமுன் காப்போம்' திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக சென்னையில் இரு இடங்கள் உட்பட தமிழகத்தில் 50 மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் 20க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேற்று மருத்துவம், ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, சிறுநீர், சளி பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய்ப் பரிசோதனை நடத்தப்பட உள்ளன. முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்துக்கான அட்டைகளும் முகாம்களில் வழங்கப்பட உள்ளன.