திருப்பெரும்புதூர்: துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 54 வயது பெண்ணிடம் ஐந்து பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிய வடமாநிலக் கொள்ளையர்கள் இருவரில் ஒருவரை தமிழகப் போலிசார் 'எண்கவுன்டரில்' சுட்டுக்கொன்றனர்.
மற்றொருவர் கைதானார். அவரிடம் இருந்து துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப் பெரும்புதூர் அருகில் உள்ள தென்னலூர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இந்திரா என்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, தென்னலூர் ஏரிப் பகுதியை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிக்குள் திருடர்கள் பதுங்கினர். அவர்களைப் பிடிக்கமுடியாமல் நூற்றுக்கணக்கான போலிசார் திணறினர்.
இதையடுத்து, டிரோன் என்ற பறக்கும் கேமராவின் உதவியுடன் கொள்ளையர்கள் தேடப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட போலிசார் வரவழைக்கப்பட்டு, காட்டுப்பகுதியில் தேடியபோது கொள்ளையர்கள் சிக்கினர்.
அப்போது நடந்த மோதலில் கொள்ளையன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்தர்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது கூட்டாளி நயீம் அக்தரும் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

