சென்னை: தமிழகத்தில் மாவோ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து யாரேனும் பிடிபட்டனரா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.
இதேபோல் கேரளா, கர்நாடகாவிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தனித்தனிக் குழுக்களாகச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
சென்னையிலும் கோவையிலும் மட்டும் ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. அம்பத்தூர், வில்லிவாக்கம், செங்குன்றம் பகுதிகளில் மாவோ பயங்கரவாதிகளோடு தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்படுவோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்றும் இதேபோல் மேலும் சிலரது வீடுகளில் சோதனை நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே பெங்களூருவில் ஐந்து, கேரளாவில் மூன்று இடங்களிலும் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சில முக்கிய ஆவணங்கள், தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை எந்தவித அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.