கொலை வழக்கில் திமுக எம்பியை விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி
கடலூர்: முந்திரி ஆலை தொழிலாளர் கொலை வழக்கு தொடர்பில் திமுக எம்பி ரமேஷிடம் சிபிசிஐடி போலிசார் விசாரணை நடத்த கடலூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆறு பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. இதையடுத்து கடந்த 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷ் எம்பி சரணடைந்தார். நேற்று வழக்கு விசாரணையின்போது அவரை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அனைத்து நாள்களும் கோவில்களை திறக்க கோரி மனு: நீதிபதி கேள்வி
மதுரை: தமிழகத்தில் உள்ள கோவில்களை அனைத்து நாள்களிலும் ஏன் திறக்கவில்லை என மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாள்களில் கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்தபோதே நீதிபதி தமிழக அரசுத்தரப்பிடம் கேள்வி எழுப்பினார். அப்போது துணிக்கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்களை அனைத்து நாள்களிலும் திறக்க அனு மதி வழங்கப்பட்டுள்ளதை நீதிபதி சுட்டிக்காட்டினார். அனைத்து நாள்களும் கோவில்களைத் திறக்க வலி யுறுத்தி தமிழக பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.
பல்முனைய சரக்குப் போக்குவரத்து பூங்கா: ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டு பகுதியில் ரூ.1,200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்கு வரத்து பூங்காவை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தானது. இந்நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அமையும் முதலாவது பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா இது என்று குறிப்பிட்டார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பத்தாயிரம் இளையர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
மதுரை, திருப்பதி இடையே புதிய விமானச் சேவை அறிமுகம்
மதுரை: மதுரை, திருப்பதி இடையேயான புதிய விமானச் சேவை வரும் நவம்பர் 19ஆம் தேதி தொடங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. பக்தர்கள், பயணி களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இச்சேவை தொடங்கப்படுவதாகவும் தினமும் இரு விமானங்கள் இயக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

