சென்னை போலிஸ் ஆணையருக்கு நெஞ்சுவலி
சென்னை: சென்னை நகர போலிஸ் ஆணையரான சங்கர் ஜிவாலுக்கு நேற்று பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. உடனே அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலுக்குள் 7.6 கி.மீட்டர் பாலம்
சென்னை: சென்னை துறைமுகம் முதல் மணலி வரை ஏழரை கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
"துறைமுகத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் கொள்கலன் லாரிகள் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சென்னை துறைமுகத்திலிருந்து மணலி வரை 7.6 கிலோ மீட்டருக்கு கடல் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயில் வரை இருபது கிலோ மீட்டருக்கு இரண்டு அடுக்கு மேம்பாலம் 6,000 கோடி ரூபாயில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் துறைமுகம் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இருந்து கோயம்பேடு வரை கீழ்ப் பகுதியில் ஆறு தடங்களும் துறைமுகத்தில் இருந்து மேல் பகுதியில் நான்கு தடங்களும் மதுரவாயல் வரை இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

