சென்னை: தமிழகத்தில் தொற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
ஆனால் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதியில்லை. இதனால் அனைத்து நாள்களிலும் கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற 12 கோயில்கள் முன்பு பாஜகவினர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையே நேற்று விஜய தசமி நாளில் கோயில் திறக்கப்பட வேண்டும் என்று கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பொன்னு சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தலைமைச் செயல கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் வழி பாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என அனுமதி அளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். ஞாயிற்றுக்கிழமைகளில் கடற் கரைக்கு பொதுமக்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.
நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்கவும் தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

