எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போேலா மருத்துவமனையில் வியாழனன்று இரவு அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு இதய அடைப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
புதிதாக 1,259 பேருக்கு கிருமித்தொற்று
சென்னை: தமிழகத்தில் கிருமிப் பரவலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,259 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு நாளில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,853ஆக அதிகரித்துள்ளது. இந்த விவரங்களை தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா வருவது வீண் முயற்சி: ஜெயக்குமார்
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா வருவது வேண்டாத வேலை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பொன்விழாவை ஒட்டி சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெயக்குமார் இவ்வாறு கூறினார். மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
பட்டாசுகளை அனுமதிக்கும்படி நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம்
சென்னை: பட்டாசுகளை அனுமதிக்கக் கோரி 4 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அனுமதிக்கவேண்டும் என அவர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிசா ஆகிய நான்கு மாநில முதல்வர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
2,000 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற உத்தரவை மீறியதை அடுத்து, நேற்றுமுன்தினம் முதல்நாளிலேயே 2,000 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

