நீலகிரி: நான்கு பேரைக் கொன்று விட்டு, கடந்த 21 நாட்களாக வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்களின் கையில் சிக்காமல் ஆட்டம் காட்டி வந்த டி23 என்ற ஆட்கொல்லி புலி, இரண்டாவது முறையாக மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் ஒருவழியாகப் பிடிபட்டுள்ளது.
புலிக்கு உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அதனை வண்டலூர் பூங்காவில் விடலாம் எனத் தெரிகிறது.
நீலகிரி மாவட்டம், மசினகுடி வனப்பகுதியில் இதுவரை நான்கு பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலி 21 நாட்களுக்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.
இது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நால்வரை புலி கொன்ற போது அதனைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து, புலியைச் சுட்டுக்கொல்ல வனத்துறையினர் முடிவெடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, "மக்களின் உயிர் மிகவும் முக்கியம்தான். ஆனால், அதற்காக புலியைக் கொல்லவேண்டாம்," என்று அரசியல் கட்சியினர் ஒருசிலர் கருத்து கூறினர்.
வனவிலங்குப் பிரியர்களும் புலியைச் சுட்டுக்கொல்வதை கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், புலியைக் கொல்வதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், புலியைச் சுட்டுக்கொல்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து, புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து போராடி வந்தனர்.
இந்நிலையில், இப்போது அந்தப் புலி அகப்பட்டுள்ளது.
கூடலூர், மசினகுடி பகுதிகளில் இதுவரை நால்வரையும் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் புலி கொன்றுள்ளது. அதைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள், மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.