சென்னை: தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கியிருந்த ரூ.1.21 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டை வங்கி அதிகாரிகள் பூட்டி முத்திரை வைத்தனர்.
நிதி நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வட்டிப் பணம் கட்டச் சொல்லியும் பணம் கட்டாமல் மதுவந்தி, 43, இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி, 2வது குறுக்குத் தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மென்டில் உள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இவர் வீடு வாங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கடன் வாங்கியுள்ளார். அதன்பின்னர் சில மாதங்களுக்கு தவணையை முறையாக கட்டியுள்ளார். இருப்பினும், வாங்கிய கடனில் 1.21 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தாமல், மதுவந்தி தொடர்ந்து நிதி நிறுவனத்தை அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் வட்டியுடன் அசலை சேர்த்து ஒரு கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாயைக் கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், அதற்குரிய பதில் சொல்லாமல் மதுவந்தி இருந்ததால், அந்த நிதி நிறுவனம் மெட்ரோபாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மதுவந்தியின் வீட்டிற்கு 'சீல்' வைத்து வீட்டை நிதி நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி நேற்று முன்தினம், மதுவந்தியின் வீடு, நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் போலிசார் பாதுகாப்போடு 'சீல்' வைக்கப்பட்டு வீட்டு சாவி நிதி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது, "அடுத்த மாதம் பணத்தைக் கட்டி விடுகிறேன். தயவு செய்து 'சீல்' வைக்கவேண்டாம்' என அதிகாரிகளிடம் மதுவந்தி கெஞ்சிய காணொளி வெளிவந்துள்ளது.
மதுவந்தி தற்போது பாஜகவில் நிர்வாகியாக உள்ளார்.

