சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் திருவண்ணாமலை-கோவைையச் சேர்ந்த ஒரு காதல் ஜோடியினர் புதுமையான முறையில் ஆழ்கடலில் திருமணம் செய்துகொண்டனர். இதைப்போலவே இப்போது நீச்சல் குழுவினர் கிரிக்கெட் விளையாடி வாழ்த்துகள் கூறியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதத்தில், நள்ளிரவு நேரத்தில் ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி ரசிகர்களை வியக்க வைத்துள்ளனர் நீச்சல் வீரர்கள்.
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோல்கத்தாவை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், வெற்றி வாகை சூடியுள்ள அணியைப் பாராட்டும் வகையில், புதுச்சேரி ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்தன் தலைமை யிலான நீச்சல் குழுவினர் ஆழ்கடலில் கிரிக்கெட் போட்டியை நடத்தினர்.
சென்னை நீலாங்கரை கடற்பகுதியில் 12 அடி ஆழத்தில் அரவிந்த்தும் இதர நீச்சல் வீரர்களும் பாதுகாப்புக் கவசங்களுடன் பந்தடித்தல், பந்துவீச்சு, ஸ்டெம்பிங் என அதிரடியுடன் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், "மீண்டும் ஒருமுறை சென்னை சிங்கங்கள் தங்களது கர்ஜனையை வெளிப்படுத்தி உள்ளன," என்று தெரிவித்துள்ளார்.

