ராமதாஸ்: இனி பாமக தலைமையில் கூட்டணி

ராமதாஸ்: இனி பாமக தலைமையில் கூட்டணி

1 mins read
9040c1e4-7dae-45f6-a499-8f3ad0ee0570
-

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் (படம்) தெரிவித்துள்ளார்.

இனி வரும் தேர்தல்களில் பாமக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்று நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

பாமகவுக்கு என தனி உளவுப்படை அமைக்கப்போவதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியில் இருந்து கொண்டே துரோகம் செய்பவர்கள் களையெடுக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

"திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நாம் பல தருணங்களில் உதவி செய்திருக்கிறோம். இனி வரும் தேர்தல்களில் நமது தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி தொடர்பில் கடைசி நேரத்தில் முடிவை மாற்றும் நிலை இனி இருக்காது," என்றார் ராமதாஸ்.

பாமகவினர் இனி ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்றும் வீடு வீடாகச் சென்று கட்சியின் பெருமைகளையும் ஆக்கபூர்வமான செயல்திட்டங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டார்.

"தமிழக மக்கள் நிச்சயம் மனம் மாறுவார்கள். நல்ல மாற்றத்தை ஏற்பார்கள். என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி ராமதாஸ் அமர வேண்டும்," என்று ராமதாஸ் மேலும் தெரிவித்தார்.

ஒன்பது மாவட்டங்களில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி நிர்வாகிகள் மீது ராமதாஸ் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பாமகவில் இருந்து சிலர் களையெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.