அமைச்சருக்கு மிரட்டல்:
திமுக முன்னாள் நிர்வாகி கைது
சென்னை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றியச் செயலாளர் நவல்பட்டு விஜி நேற்று முன்தினம் கைதானார். கடந்த 2012ஆம் ஆண்டு திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த அன்பில் மகேஷுக்கும் நவல்பட்டு விஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து முகநூலில் அன்பில் மகேஷுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவதூறாகவும் பதிவிட்டதாக நவல்பட்டு விஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அவரை போலிசார் கைது செய்தனர்.
முதல்வர் குறித்து அவதூறு:
பாஜக பிரமுகர் நள்ளிரவில் கைது
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த புகாரின் பேரில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இதனால் அக்கட்சி வட்டாரங்களில் அதிர்ச்சி நிலவுகிறது. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் உதவியாளர் சந்தோஷ் காவல்துறையில் அளித்த புகாரில், கல்யாணராமன் தமது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி, திரைப்பட நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா ஆகியோர் குறித்து ஆபாசமாகப் பதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர்.
குப்பை கொட்டினால் அபராதம்
சென்னை: குப்பை கொட்டினால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பொது மக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தோட்டக்கழிவுகள், மரக்கழிவுகள், திடக்கழிவுகள் ஆகியவை தொடர்பாகவும் அபராதத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்: கொரோனா இழப்பீடு குறித்து முதல்வர் முடிவு செய்வார்
சென்னை: கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல் வந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா தொற்றுப்பரவலின் தாக்கம் குறைந்துகொண்டே வருவதாக அவர் கூறியுள்ளார்.

