முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

1 mins read
29f7946e-d614-465f-bc3a-53aaec49b6dc
சோதனை நடவடிக்கைக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வந்துள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் விவாதம் செய்யும் சி.விஜயபாஸ்கர். படம்: தமிழக ஊடகம் -

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான, தமிழகம் முழுவதும் உள்ள 43 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

விராலிமலை அருகே இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றதை அடுத்து, அங்கே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் கூடுதல் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

விஜயபாஸ்கர் கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்திற்குமேல் ரூ.27 கோடிக்கு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை காவல்நிலையத்தில் விஜயபாஸ்கர்மீதும் அவரின் மனைவி ரம்யாமீதும் தமிழக லஞ்ச ஒழிப்புப் போலிசார் சொத்துக் குவிப்பு வழக்கு பதிந்துள்ளனர்.

அமைச்சராக இருந்தபோது விஜயபாஸ்கர் மருத்துவக் கருவிகள் வாங்கியதில் முறைகேடு செய்துள்ளதாகவும் டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரம், 53 லட்சத்திற்கு பிஎம் டபிள்யூ கார், 40 லட்சத்திற்கு 85 சவரன் தங்க நகைகள் வாங்கி உள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜயபாஸ்கரின் மனைவிக்கும் மூத்த மகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அவரின் மனைவியிடம் கவச உடையணிந்தபடி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.