செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2f7dffae-8323-425b-8cf5-f523c933888b
-

நடமாடும் பல்மருத்துவ சேவையைத் தொடங்கிைவத்த அமைச்சர்

சென்னை: 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தைப் போலவே 'மக்களைத் தேடி பல் மருத்துவம்' எனும் நடமாடும் மருத்துவச் சேவையை வழங்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ்

பள்ளி மாணவர்களும் பயன்பெறலாம் என்றும் அவர் கூறினார். நேற்று இந்தச் சேவையைத் தொடங்கிவைத்த அமைச்சர், இனி செவ்வாய், வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் இச்சேவை வழங்கப்படும் என்று சொன்னார்.

கைபேசி வெடித்து இளையர் பலி

கோவை: கோவையில் கைபேசி வெடித்து சிவராம் என்ற இளையர் உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம், மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மயில்சாமி என்பவரின் மகன் சிவராம். இவர் இரவில் தன்னுடைய ஸ்மார்ட்போனை 'சார்ஜ்' செய்துள்ளார். அப்போது ஒரு அழைப்பு வரவே சார்ஜரை கழட்டாமல் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது கைபேசி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிவராம் உயிரிழந்தார்.

கணவர்மீது வரதட்சணை புகார்

திருச்செங்கோடு: வரதட்சணை கேட்டு தனது கணவரும் அவர்களது குடும்பத்தினரும் துன்புறுத்துவதாக சேலம் மாவட்டம், பொன்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற இளம்பெண் தனது கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார். தான் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 7ஆம் தேதியன்று பிறந்த கைக்குழந்தையுடன் வந்து போராட்டம் நடத்திய நந்தினியை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் அழைத்துச்சென்று சமாதானப்படுத்தி விசாரணை செய்தார். பெண்ணின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளைத் தாக்கல் செய்ய வலியுறுத்து

சென்னை: அண்மையில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இருகட்டமாக அக்டோபர் 6, 9 ஆகிய இரு தேதிகளில் நடைெபற்றது. இந்த தேர்தலின் போது செய்யப்பட்ட செலவுக் கணக்கு விவரத்தை வேட்பாளர்கள் தாக்கல் செய்யவேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உரிய அலுவலரிடம் இந்த விவரத்தைத் தாக்கல் செய்ததற்கான ஒப்புதலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன், தேர்தல் செலவுக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரி பெற்றோர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது மகனைக் கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத்தரக் கோரி ஒரு குடும்பத்தினர் மனு அளித்தனர்.

வீராட்சிமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ், 45, என்பவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்திடம் அளித்த மனுவில், "வீராட்சிமங்கலம் காமாட்சிநகரில் வசித்து வரும் நாங்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்களது மகன் கோபிநாத்தை, 20, பூலவாடி அருகே கடந்த ஜூலை 18ஆம் தேதி மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றுவிட்டனர்.

"இதுகுறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது மகனைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்," என்று கேட்டுக்கொண்டுள்ளார்.