கும்பகோணம்: கும்பகோணம் அருகே காணாமல் போனதாக கடந்த ஒருவாரமாகத் தேடப்பட்டு வந்த பெண்ணை அவரது சக தோழியே கொன்று கருவேலங்காட்டில் புதைத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தனது லட்சக்கணக்கிலான பணம், நகைகளைத் திருப்பிக்கேட்டதால், தோழி என்றும் பாராமல் அவரை ஒரு குடும்பமே அடித்துக்கொன்று கருவேலங்காட்டில் புதைத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நால்வரை போலிசார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் சிவபுரனி பகுதி யைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி அனிதா, 30. இரு குழந்தைகள் உள்ளனர். டேவிட் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி திருப்பனந்தாளில் உள்ள வங்கிக்குச் சென்றுவிட்டு வருவ தாகக் கூறிவிட்டுச் சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை.
திருப்பனந்தாள் காவல் நிலை யத்தில் உறவினா்கள் புகார் தர, அனிதாவின் கைபேசி எண்களைப் பயன்படுத்தி போலிசார் விசாரணையைத் தொடங்கினர்.
அப்போது, அவரது எதிர் வீட்டில் வசித்து வரும் கார்த்திக், 31, கடைசியாக அனிதாவை கைபேசி யில் அழைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில், அனி தாவைக் கொலை செய்தததை ஒப்புக்கொண்டார்.
"அனிதாவும் சத்யாவும் பள்ளித் தோழிகள். இருவரும் ஒரே ஊரில் திருமணம் செய்துகொண்டதால் அவ்வப்போது சத்யா வீட்டுக்கு அனிதா சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், அனிதாவிட மிருந்து சத்யாவும் அவரது கணவா் கார்த்திக்கும் பல லட்ச ரூபாய் பணத்தையும் 10 பவுன் நகைகளையும் வாங்கி ஏமாற்றியுள்ளனா்.
"தனது கணவர் வெளிநாட்டிலிருந்து ஓரிரு மாதங்களில் திரும்பி வரப்போவதாகக் கூறி தனது பணம், நகையை அனிதா திருப்பிக்கேட்டுள்ளார்.
"இதையடுத்து, கடந்த 12ஆம் தேதி பணம் தருவதாகக் கூறி அனிதாவை தங்களது வீட்டுக்கு வரவழைத்து கார்த்திக், சத்யா, 30, கார்த்திக்கின் தந்தை ரெங்கநாதன், 60, சத்யாவின் சகோதரா் சரவணன், 31, ஆகியோர் சோ்ந்து தாக்கிக் கொன்று புதைத்துள்ளனர்," என்று விசாரணையில் தெரியவந்த தாகப் போலிசார் கூறினர்.

