செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3fd71bb9-f8e0-4811-85a3-b98fec154b0f
-

ரூ.23.5 லட்சம் தங்கம் பறிமுதல்

ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஷார்ஜா, துபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.23½ லட்சம் மதிப்புள்ள 466 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இரு பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: அண்டை மாநிலமான கேரளாவில் கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் சொத்துகள் சேதம் அடைந்துள்ள நிலையில், பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பு உயர்வு

சென்னை: முதுநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பில், பொதுப் பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும் இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் வயது வரம்பு உயர்த்தப்படுவதாக அரசின் அறிக்கை விவரம் தெரிவித்துள்ளது.

100 வயது பாட்டியின் பிறந்தநாளைக்

கோலாகலமாக கொண்டாடிய மக்கள்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள தற்காஸ் கிராமத்தில் கோவிந்த கமலத்தம்மாள் என்ற பாட்டி தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவ்விழாவில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கி, விருந்துபசாரம் செய்து, பாட்டியிடம் ஆசிபெற்றனர். கமலத்தம்மாளின் கணவர் கோவிந்தராசு கடந்த 1994ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவருக்கு மூன்று மகன்கள், இரு மகள்கள், மருமகன், மருமகள், பேரன் பேத்தி கள், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் என 50 பேர் உள்ளனர். கமலத்தம்மாள் இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதோ, மருந்துகளைச் சாப்பிட்டதோ கிடையாது என்கின்றனர். கொரோனா சமயத்திலும் அவர் ஆரோக்கியமாக இருந்துள்ளார். நீரிழிவு, ரத்த அழுத்தமும் இல்லை என்றும் அவரது கண் பார்வை மிகவும் கூர்மையாக இருப்பதால் கண்ணாடி அணிந்து கொண்டதும் கிடையாது என்கின்றனர். படம்: தமிழக ஊடகம்

ரூ.65,000 செல்லா பணத்துடன் முதியவர்

கிருஷ்ணகிரி: பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக ரூ.65,000 பணத்துடன் சின்னக்கண்ணு, 65, என்ற பார்வையிழந்த முதியவர் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் பணத்தை செல்லும் பணமாக மாற்றித் தரும்படி மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்வதாகவும் பண விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கிக்கு தெரிவிப்பதாகவும் கூறி முதியவரை அனுப்பிவைத்தனர்.