சிவகங்கை: கீழடியில் நவீன தொழில்நுட்பத்துடன் திறந்தவெளி தொல்லியல் கண்காட்சி அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வில் கிடைத்த ஏராளமான தொல்லியல் பொருள்களில் வெள்ளி நாணயம் முக்கியமானதாக கருதப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு தளங்களில் தமிழக தொல்லியல்துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தமிழர் பெருமையை எடுத்துக்கூறும் வகையில் ஏராளமான பொருள்கள் கிடைத்தன.
நான்கு அகழாய்வுத் தளங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடியில் ரூ.12 கோடி செலவில் அனைத்துலகத் தரத்தில் அகழ் வைப்பகம் அமைக்கப்படும் என்றார்.
"கீழடியில் கிடைத்த வெள்ளி நாணயம் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அங்கு கண்டறியப்பட்ட உறைகிணற்றில் மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆறாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பானை ஓட்டிலும் மீன் உருவம் உள்ளது. இரண்டுக்கும் உள்ள கால ஒற்றுமைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
"கீழடியில் முதன்முதலாக திறந்தவெளி கண்காட்சி நவீன தொழில் நுட்பத்துடன் அமையவுள்ளது," என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
இதற்கிடையே, திருவண்ணாமலையில் சோழர் கால நடுகல் கல்வெட்டு (படம்) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள வேடியப்பன் கோவிலில் உள்ள நடுகல் கல்வெட்டு, முதலாம் பராந்தகன் கல்வெட்டு, ஒரு வரி கல்வெட்டு ஆகியவை சோழர் காலத்தைச் சேர்ந்தவை என திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.