முதல்வர் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு: உயர் நீதிமன்றம் பாராட்டு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த்தின் வாகனம் சாலையில் வெகுநேரம் காத்திருக்க நேரிட்டது. இதற்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்துறை செயலாளரை நேரில் அழைத்து நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
விமான நிலைய கழிவறையில் தங்கம்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் காணப்பட்ட சிறு பையில் இருந்த 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கமாக இருக்கக்கூடும் என சுங்கத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இதன் அனைத்துலக சந்தை மதிப்பு 40 லட்சம் ரூபாய் என்றும் கழிவறைக்குள் தங்கத்தை யார் கொண்டு சென்றது என்பதை அறிய விமான நிலைய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், கனமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் அணு உலைகளுக்கு எதிர்ப்பு
சென்னை: கூடங்குளத்தில் 3,4 அணு உலை அமைக்க மாநில அரசு அனுமதித்துள்ளது. தமிழக மக்களின் நலன் கருதி இதை மாநில அரசும், ஒன்றிய அரசும் உடனடியாக கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ஆழ்நிலக் கருவூலம் எங்கே அமைக்கப்பட உள்ளது என்பதை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கூடங்குளத்தில் திறம்பட இயங்காது இருக்கும் இரண்டு அணு உலைகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முறைகேடு: ஆதாரங்களை அளிக்க அண்ணாமலைக்கு அமைச்சர் கெடு
சென்னை: மின்வாரியத் துறையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கான ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு விதித்துள்ளார். இல்லையெனில் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

