சேலம்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கனகராஜ் மரணம் குறித்த மேல் விசாரணையை சேலம் காவல்துறையினர் தொடங்கி உள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்ததாக முன்பு நடந்த விசாரணையின்போது கூறப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இப்போது மேல் விசாரணையை சேலம் காவல்துறையினர் தொடங்கி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளையடிக்கும் முயற்சி நடந்தது. அத்துடன், அப்போது ஓம் பகதூர், 50, என்ற காவலரும் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஓட்டுநரான கனகராஜ் என்பவரும் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்தது.
கனகராஜ் சாலை விபத்தில் உயரிழந்ததாக வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், கனகராஜின் அண்ணன் தனபால் என்பவர் "கனகராஜ் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழக்க வாய்ப்பில்லை," என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, விபத்து என மூடப்பட்ட கனகராஜ் மரண வழக்கு விசாரணையை போலிசார் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளனர்.
சேலம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தகவல் தெரிவித்துள்ளார்.

