இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து பறிமுதல்
கடலுார்: கடலூரை அடுத்த காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல், 15, என்ற மாணவர் 'பிளஸ் 1' வகுப்பில் படித்து வந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் ேததி அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்றார். அப்போது, ஓட்டுநர் திடீரென்று பேருந்தை நிறுத்தியதால், படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த ராஜவேல் கீழே விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். ராஜவேலின் தாய் ஜெயலட்சுமி இழப்பீடு கேட்டு கடலுார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ரூ.10 லட்சத்து 20,000 பணத்தை இழப்பீடாக வழங்கும்படி விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால், இதுவரை இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி, கடலூர் பேருந்து நிலையத்தில் நின்ற அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் நீதிமன்றத்துக்கு ஓட்டிச்சென்றனர்.
வேலை இல்லாதவர்கள் போராட்டம்
சென்னை: மின் வாரியம் நடத்திய 'கேங்மேன்' எழுத்துத் தேர்வில் பங்கேற்று வேலை கிடைக்காதவர்கள், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தினர்.
"எழுத்துத் தேர்வில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் எடுத்தவருக்கு வேலை கிடைக்கவில்லை. நாங்கள் 5,000 பேர் இருக்கிறோம். அமைச்சரிடம் முறையிட்டும் பயனில்லை. வேலை கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பழனிசாமி
சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பரிசோதனைக்காக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் ேநற்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நேற்று மாலை வீடு திரும்பினார்.

