சென்னை: குப்பையில் வீசப்பட்ட 100 கிராம் தங்க நகையைக் கண்டெடுத்த தூய்மைப் பணியாளர் ஒருவர், அதை பத்திரமாக உரியவரிடம் ஒப்படைத்து மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
ஏழ்மை நிலையிலும் பிறரது பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையாக நடந்துகொண்ட பெண் துப்புரவுப் பணியாளர் மேரிக்கு காவல்துறை உயர் அதிகாரிகளும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கணேஷ் ராமன் என்பவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது இரு பெண் பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பிள்ளை களுக்கு 100 கிராம் தங்க நாணயத்தைச் சிறுக சிறுக சேமித்து வீட்டில் வாங்கி வைத்திருக்கிறார்.
இந்நிலையில், அந்த தங்க நாணயத்தை பழைய உறை ஒன்றில் போட்டு அதை மெத்தைக்கு அடியில் பாதுகாப்பாக வைத்தி ருந்தார். இதை மனைவி ஷோபனாவுக்கும் தெரியப்படுத்தாமல் ரகசியமாக இருந்துள்ளார்.
இதையடுத்து, வழக்கம்போல் வீட்டையும் அறையையும் சுத்தம் செய்த ஷோபனா மெத்தைக்கு அடியில் இருந்த உறையை தங்க நாணயத்துடன் அப்படியே குப்பையில் வீசிவிட்டார்.
பணி முடிந்து வீடு திரும்பிய கணேஷ் ராமன், வீடு தூய்மைப் படுத்தப்பட்டு இருப்பதை பார்த்து விட்டு மெத்தையின் கீழ் பார்த்திருக்கிறார்.
அங்கு அவர் வைத்திருந்த 100 கிராம் தங்க நாணய உறையைக் காணவில்லை. ஷோபனா அந்த உறையைக் குப்பையில் வீசிவிட்டதாகக் கூறியதை அடுத்து, கணவனும் மனைவியும் காவல் நிலையத்துக்கு பதறியடித்துக்கொண்டு ஓடி புகார் அளித்தனர்.
இந்நிலையில், மேரி என்ற பெண் துப்புரவுப் பணியாளர் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தை போலிசில் ஒப்படைத்தார். அந்த நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேரியின் கையாலேயே அந்த தங்க நாணயம் தம்பதியிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

