புதுடெல்லி: நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்ததாகவும் அக் குழு விவரம் கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை யில், "நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமல்ல.
"அவரது மரணம் இயற்கை யாகவே நிகழ்ந்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசியால் அவருக்கு மரணம் ஏற்படவில்லை," என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இந்த தகவல் திரையுலகினரை மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இவ்வாண்டு ஏப்ரல் 15ஆம் ேததிஅன்று கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட விவேக் இரு நாள்களில் உயிரிழந்தார்.
நடிகர் விவேக்கின் இந்த திடீர் மரணம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் இந்த உயிரிழப்பு விபரீதம் நடந்துள்ளது என மக்கள் மத்தியில் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாகக் கூறி விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தார்.
இந்தப் புகாரை ஏற்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை முடிவில் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. அவர் உயர் ரத்த அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விளக்கம் அளித்துள்ளது.


