'ஜெயலலிதாவின் சிலையை நல்ல முறையில் அரசே பராமரிக்கும்'
சென்னை: மாநில உயா்கல்வி மன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இனி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை அரசு சார்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பாக நிறுவப்பட்டுள்ள எந்த ஒரு தலைவரின் சிலைக்கும் அரசின் சார்பாக தினசரி மாலையிடும் வழக்கம் இல்லை. முக்கிய நாள்களில் மாலையிட்டு, மரியாதை செய்வது தொடர்கிறது. இனிமேல் ஜெயலலிதா சிலைக்கும் அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி அன்று அரசு சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செய்யப்படும் என்று பொன்முடி கூறியுள்ளார்.
டிசம்பர் 1 முதல் தீப்பெட்டியின் விலையை உயர்த்த முடிவு
சிவகாசி: தமிழகத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, வேலூர், குடியாத்தம், தர்மபுரி ஆகிய இடங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தீப்பெட்டி தயாரிப்புக்குத் தேவைப்படும் அட்டை, பேப்பர், மெழுகு, குளோரைடு, பாஸ்பரஸ் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு இருமடங்காக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் இதன் விலையை அதிகரிக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மது கலந்து ஐஸ்கிரீம் விற்பனை; கடையை மூடிய அதிகாரிகள்
கோவை: கோவையில் ஐஸ்கிரீமில் மதுபானத்தைக் கலந்து விற்பனை செய்த கடையை மூடி மூத்திரை வைத்துள்ளனர் அதிகாரிகள். அதன் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனின் உத்தரவின்பேரில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கடையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, ஐஸ்கிரீம் தயாா் செய்யும் இடத்தில் இரு மதுபாட்டில்களும் காலாவதியான உணவுப் பொருள்களும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கடை முறையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் ெதரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் கடையின் உரிமத்தை ரத்து ெய்தனா்.
துணி வாங்கினால் ஆடுகள் பரிசு
திருவாரூர்: திருவாரூரில் உள்ள துணிக்கடை ஒன்று தீபாவளிக்குத் துணி வாங்கினால் ஆடுகள் பரிசாக வழங்கப்படும் என்ற வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருவாரூரில் உள்ள நியூ சாரதாஸ் கடையின் உரிமையாளர் மணியமுதன், தன் கடையில் ஜவுளி வாங்குபவர்கள் மூவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆடுகளைப் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த என்னாலான சிறு முயற்சி என்று மணியமுதன் கூறியுள்ளார்.

