சென்னை: தமிழகத்தில் 50,000 இடங்களில் நேற்று நடைபெற்ற ஆறாம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி முகாமில் ஏராளமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன் அடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை களில் நடைபெறும் இம்முகாம், மதுப்பிரியர்கள், அசைவப் பிரியர் களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சனிக்கிழமையான நேற்று நடத்தப்பட்டதாக மக்கள் நல் வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மது அருந்துபவர்களும் மாமிசம் சாப்பிடுபவர்களும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற தவறான வதந்தி பரவி வருவதால், இந்த இருசாராருக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் நேற்றைய தினத்தில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் ராதாகிருஷ்ணன் மேலும் கூறினார்.
''இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இன்னும் 57 லட்சம் பேர் உள்ளனர். அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்,'' என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
பாலர் பள்ளிகள் திறப்பு இல்லை
இதற்கிடையே மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், "கிருமிப்பரவல் இன்னும் முழுமையாக ஒரு கட்டுக்குள் வரவில்லை. அத்துடன், கொரோனா மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்ற எச்சரிக் கையும் உள்ளதால் பள்ளிகள் திறப்பில் பள்ளிக் கல்வித்துறை அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது," என்று கூறினார்.
'வராது என கூறமுடியாது'
"மாநிலத்தில் இதுவரை மூன்றாவது அலைக்கான அறிகுறி இல்லை. ஆனால், இந்த அலை வராது என உறுதியாகக் கூறமுடியாது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது," என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

