திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்
வேலூர்: பேரணாம்பட்டு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தன், 80, வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர், வேலூர் அருகே உள்ள பேரணாம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாகப் பணியாற்றியவர்.
துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட திருடன் கைது
மதுரை: வடஇந்தியாவை போலவே தமிழகத்திலும் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில், மதுக்கடை ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி ஆயுதங்களைப் போலிசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்ற ரவுடி, முத்துநகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த இடத்தில் நடந்து சென்ற ஹரிஹரசுதன் என்பவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தையும் தங்கச் சங்கிலியையும் பறித்துள்ளார்.
இதனையடுத்து, சரத்குமாரைக் கைது செய்த போலிசார், அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியையும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.
சாதிப்பெயரைக் கொண்ட இரு குளங்களின் பெயர்கள் மாற்றம்
அம்பத்தூர்: சாதிப்பெயரைக் கூறும் வகையில் அழைக்கப்பட்டு வந்த இரு குளங்களின் பெயர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த அம்பத்தூர், சோளிங்கநல்லூர் பகுதிகளில் குறிப்பிட்ட சாதியின் பெயரில் அமைந்திருந்த இரண்டு குளங்களின் பெயர்களை மாற்றவேண்டும் என நீண்ட காலமாகவே அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது இரண்டு குளங்களுக்கும் 'வண்ண குளம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

