சென்னை: தமது இரண்டாவது மகள் சௌந்தர்யா விசாகன் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய வகையில் 'ஹூட்' (HOOTE) எனும் செயலியை உருவாக்கி உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அதை தாம் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அறிக்கை வழி அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நாம் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும் விஷயங்களையும் இனி நம் குரலிலேயே எந்த மொழியிலும் 'ஹூட் ஆப்' (HOOTE APP) மூலமாக பதிவிடலாம்.
"இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியை என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்," என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் அவருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட உள்ளது.
இதையடுத்து நேற்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், விருது கிடைக்கும் என தாம் அறவே எதிர்பார்க்கவில்லை என்றார்.
தாம் விருது பெறுவதைப் பார்க்க இயக்குநர் கே.பாலசந்தர் இல்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
"தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த இயக்குநர் கே.பாலசந்தர் இப்போது நம்மிடையே இல்லை.
"நான் விருது பெறுவதைப் பார்க்க அவர் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது," என்றார் ரஜினி.
விருது பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்திப்பதாகவும் அப்போது விரிவாகப் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

