சென்னை: அம்மா உணவகங்கள் ஏழை, எளிய மக்களின் பசியாற்று மையங்களாகத் திகழ்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
எனவே அந்த உணவகங்கள் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் அறிக்கை வழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலிவு விலையில் வழங்கப்படும் உணவை நம்பி வாழ்வோர் எண்ணிக்கை கொரோனா நெருக்கடி ஏற்பட்ட பின்னர் பன்மடங்கு பெருகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அத்திட்டத்தை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவுமுறையில் மாற்றம் செய்துள்ளதாகவும் பணியாட்களைக் குறைத்து வருவதாகவும் வெளிவரும் தகவல்கள் தமக்கு கவலை அளிப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள், வாய்மொழி உத்தரவு வாயிலாக இதைச் செயல்படுத்தி வருவதாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
"இந்த நடைமுறை மாற்றங்களுக்கு அம்மா உணவகம் நட்டத்தில் இயங்குவதே காரணம் என்கிறார்கள்.
சென்னை மாநகராட்சி தன் வருவாயைப் பெருக்கிக்கொள்ள பல வழிகள் இருக்கும்போது, சிறிய நட்டத்தை காரணம் காட்டி இத்தகைய நல்ல திட்டங்களை சிதைப்பது மக்கள் நலன் நாடும் அரசுக்கு அழகல்ல," என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
'அம்மா உணவகங்களைக் கைவிடும் எண்ணமில்லை' என திமுக அரசு பதவியேற்ற பிறகு அறிவித்ததாக அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.