செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
696b9657-56d6-4442-adaa-725e31a93b43
போராட்டம் நடத்திய அதிமுகவினர். படம்: ஊடகம் -

அமைச்சர்: கோயில்களைச் சுற்றியுள்ள மதுக்கடைகள் மூடப்படும்

சென்னை: தமிழகத்தில் கோயில்களைச் சுற்றியுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தி வரும் நிலையில், நிரந்தரமாக அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி, அவரது உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று முழுமையாக முடிந்தவுடன் பக்தி சுற்றுலாவுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் குறைந்தது ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காலை 11 மணிக்கு முன்னிலையானார்.

பொய் வழக்கு: காவல்நிலையத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

திருச்சி: பொய் வழக்கு பதிவுசெய்து தம்பதியை துன்பத்துக்கு உள்ளாக்கிய காவல்நிலையத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி நாவல்பட்டு காவல் நிலையத்தினருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை முற்றுகையிட்ட நால்வர் கைது

கரூர்: கரூரில் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அதிமுக மாவட்ட கவுன்சிலர் உட்பட நால்வரை போலிசார் நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.

மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் கடந்த 22ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மந்த்ராச்சலம், தேர்தலை தள்ளி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக மாவட்ட கவுன்சிலர் திரு.வி.க. உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 18 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மாவட்ட கவுன்சிலர் திரு.வி.க.வையும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நால்வரையும் தான்தோன்றிமலை போலிசார் கைது செய்தனர்.