செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
07ea2759-0001-478d-ae93-6986c313905d
-
Google News Preferred Icon

யானைகளுக்கு நீச்சல்குளம்

திருச்சி: யானைகள் இயல்பாகவே தண்ணீரைக் கண்டால் குதூகலமாகி, படுத்துப் புரளும். தண்ணீரை உறிஞ்சி தனது உடல்மீது பீய்ச்சி அடித்துக்கொள்ளும். அவ்வகையில், திருச்சி திருவரங்கம் கோயில் யானைகள் குளிப்பதற்கு என்றே மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இக்குளத்தில் கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமியை முதல்முறையாக குளிக்கவைத்து கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து ஆய்வு செய்தார். படம்: தமிழக ஊடகம்

ரஜினி அறிமுகம் செய்த செயலி

சென்னை: யார் விருப்பப்பட்டாலும் தங்கள் குரல் பதிவுகளைப் பதிவிடும் வகையில் ஹூட் (hoote) எனும் சமூகவலைத்தளச் செயலியை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகம் செய்துவைத்தார். செளந்தர்யா ரஜினிகாந்தின் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தச் செயலி, 60 விநாடிகள் அளவுக்கு 'ஆடியோ'வை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாதா சாகேப்? பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன் இந்தச் செயலியை நேற்று அறிமுகம் செய்துவைத்தார்.

100 நாளில் 1,000 கி.மீ. தூரம் ஓட சுகாதார அமைச்சர் இலக்கு

வேலூர்: நாள் ஒன்றுக்கு 10 கிலோ மீட்டர் வீதம் 100 நாள்களில் 1,000 கி.மீ. தூரத்தை ஓடிக் கடக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். கொரோனா தடுப்புப் பணிக்காக வேலூர் மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்ற மா.சுப்பிரமணியன், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராமம் ஒன்றில் தனது ஓட்டத்தைத் தொடங்கியவர், முதல் நாளன்று 15.3 கி.மீ. தூரம் ஓடினார். அதன்பிறகு, அங்கிருந்த கடையில் அமர்ந்து தேநீர் அருந்தியவர், மக்கள் கொரோனாவின் பிடியில் சிக்கி விடக்கூடாது என்றும் உடல்நலனைக் காக்க உடற்பயிற்சிகள் செய்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முன்னாள் முதல்வரின் உதவியாளர் மீது ரூ.17 லட்சம் மோசடி வழக்கு

சேலம்: போக்குவரத்து துறையில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் முதல்வர் கே.பழனிசாமியின் உதவியாளர் மணி மீது இம்மாவட்ட காவலர்கள் வழக்குப் பதிந்துள்ளனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்செல்வன், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் வேலையைப் பெறுவதற்காக ரூ.17 லட்சத்தை மணியிடம் கொடுத்து ஏமாந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை மணியின் மீது மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிந்து, விசாரணை நடந்து வருகிறது.

13 விமான நிலையங்களை தனியாரிடம் வழங்க நடவடிக்கை

புதுடெல்லி: திருச்சி உள்ளிட்ட 13 விமான நிலையங்களை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விமான நிலையங்களை தனியாருக்கு கொடுப்பதற்கான குத்தகை நடவடிக்கைகள் விரைவில் முடிவடையும் என்று விமானப் போக்குவரத்து ஆணையத் தலைவர் சஞ்சீவ்குமார் தெரிவித்துள்ளார்.