புதுடெல்லி: ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு தேவை என்று அப்போதைய தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதால்தான், அவர் தங்கியிருந்த வார்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன என்று நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது அப்போலோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அத்துடன், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர் குழுவினர்களிடம் தாங்கள் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் முன் எங்கள் மருத்துவர்கள் முன்னிலையாக மாட்டார்கள் என்றும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாகக் கருதப்படும் நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள அப்போலோ நிர்வாகம், ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து அப்போலோ நிர்வாகத்தையும் மருத்துவர்களையுமே விசாரித்து வருவதாகவும் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விசாரிக்காமல் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் புகார் கூறியுள்ளது.

