தஞ்சை: அதிமுகவை மீட்பதே தங்கள் நோக்கம் என்றும் அதற்காக இறுதி மூச்சு வரை போராடப் போவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் சரியானது என்று குறிப்பிட்டுள்ளார்.
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முன்னாள் அமைச்சர்கள் சிலர் அதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "சசிகலா கூறுவதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவது இல்லை. அவர் பேசுவது சூரியனைப் பார்த்து ஏதோ ஒன்று குரைப்பது போல் உள்ளது," என்று விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வது குறித்து அதிமுக தலைவர்கள் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என்றார் ஓபிஎஸ். மேலும், தலைவர்கள் நல்ல வார்த்தைகளை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பேசவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவரது இந்த கருத்து சசிகலா ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் நிதானமாகப் பேசக்கூடியவர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
"சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து சரியானது. அதை நான் வரவேற்கிறேன். அதிமுகவை மீட்டெடுப்பதே எங்கம் லட்சியம்.
"மருது சகோதரர்கள் வீரத்திற்கும் விசுவாசத்திற்கும் பெயர் போனவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்," என்று தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவை மீட்டெடுப்பதில் மருது சகோதரர்களைப் போல் சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் உதவுவார் என்று தினகரன் சூசகமாக தெரிவித்திருப்பதாக அமமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

