பாஜக பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை: மத மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத் தளத்தில் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான பாஜக பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழக பாஜக சார்பில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களில் கல்யாணராமனும் ஒருவர். தமிழகத்தில் சமூக வலைத்தளங்க ளில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிடுவோர் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி படுகொலை
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வட்ட துணைச் செயலாளர் இளங்கோவன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தால் சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் பதற்றம் நிலவியது. ஐம்பது வயதான இளங்கோவனுக்கும் சஞ்சய் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது தேநீர் கடையருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளங்கோவனை ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து, பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து சஞ்சய்க்கு வலைவீசப்பட்டுள்ளது.
மாதந்தோறும் 'நட்சத்திர காவலர்' விருது
சென்னை: சிறப்பாகப் பணியாற்றும் காவல்துறையினருக்கு இனி மாதந்தோறும் 'நட்சத்திர காவலர்' விருது வழங்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மெச்சத்தக்க வகையில் பணியாற்றும் போலிசாரை கூடுதல் காவல் ஆணையர் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு மாதமும் கண்டறிந்து அவர்களது பணியை மதிப்பிட்டு 'மாதத்தின் நட்சத்திர காவலர்' என்ற விருது வழங்கப்பட உள்ளது என்றும் விருதுக்கு தேர்வாகும் போலிசாருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி, தனிப்பட்ட செயல்திறன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் ஆணையர் கூறியுள்ளாரா்.
அடுத்தடுத்து இருமுறை நில அதிர்வு: அச்சத்தில் வேலூர் கிராம மக்கள்
வேலூர்: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. குடியாத்தம் அருகே உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த 21ஆம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி யடைந்த கிராம மக்கள் சிலர் மீண்டும் வீட்டுக்குள் செல்லாமல், அன்றைய இரவை வீதியிலேயே கழித்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது வீடுகளில் இருந்த பொருள்கள் நகர்ந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
வீடு தேடிச்சென்று தடுப்பூசி போட முடிவு
சென்னை: தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பலர் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாத வர்களின் பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட நிர்வாகத் தரப்பிடம் சுகாதாரத்துறை கேட்டுள்ளது. அந்தப் பட்டியலின்படி வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி குறித்து பிரசாரம் செய்யவும் வீட்டில் வைத்தே தடுப்பூசி போடவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகத்தகவல் தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் தமிழகத்தில் புதிதாக 1,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒரே நாளில் மேலும் 15 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 36,048ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் நேற்று முன்தினம் 1,326 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

