விழுப்புரம்: பள்ளிக்கல்வித் துறையால் தொடங்கப்பட்டுள்ள 'இல்லம் தேடி கல்வி'த் திட்டம் மிகப்பெரிய கல்விப்புரட்சிக்கு, மறுமலர்ச்சிக்கு வித்திடும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் விழுப்புரம், கன்னி யாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங் களில் இத்திட்டம் முதல்கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், முதலியார் குப்பம் கிராமத்தில் புதன்கிழமை மாலை இத்திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர், "கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே, கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே! செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும் கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்" என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். அவரது பாடலுக்கு ஏற்ப பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டுள்ளது.
"இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்ற அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், நூற்றாண்டு காலத்திற்கு அறிவின் வெளிச்சம் சுடர்விட உள்ளது," என்றார்.
இத்திட்டத்தைத் தொடங்க காரணமாக இருந்த கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி யையும் பாராட்டிய முதல்வர், "கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றலில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்யவே 'இல்லம் தேடி கல்வி'த் திட்டம் செயல் பாட்டுக்கு வந்துள்ளது.
"இத்திட்டத்திற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னார்வலர்களைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு மாலை ஒரு மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் புதுமையான முறையில் பாடம் கற்பிக்கப்படும்," என முதல்வர் கூறியுள்ளதாக 'தினமணி' ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.
"இனிது, இனிது கற்றல் இனிது. நம் மாணவர்களோட கற்றல் இடைவெளியைக் குறைக்க 'இல்லம் தேடிக் கல்வி' என்ற அருமையான திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அனைத்து குழந்தைகளும் பயன்பெற பெற்றோரும் ஊர்மக்களும் ஊக்குவிப்போம், உறுதி செய்வோம்," என விழிப்புணர்வு காெணாளி ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

