சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாள்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வியாழனன்று மாலை அனுமதிக்கப்பட்டார்.
இந்த திடீர் செய்தியால் ரஜினியின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் துணுக்குற்றனர்.
அவரது உடல்நலன் குறித்து திரையுலகினரும் ரசிகர்களும் விசாரிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், "ரஜினி நல்ல உடல்நலத்துடன் உள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்," என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறினார்.
"தலைவர் நலமாக உள்ளார். வதந்திகளை நம்பவேண்டாம்," என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குழுவினர் மருத்துவமனையில் இருந்து அதிகாரபூர்வ தகவலைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில், ரஜினிகாந்துக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் பாதிப்பு இருந்ததாகவும் அது வெற்றிகரமாக சரி செய்யப்பட்டதாகவும் காவிரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தக் குழாயில் பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சில நாட்களில் குணம்பெற்று வீடு திரும்புவார் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரஜினிகாந்த் உறவினரும் நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரஜினிகாந்த் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது. நிச்சயமாக 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாகும்போது அவர் வீட்டில் இருப்பார்," என்று தெரிவித்தவர், "அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து எனக்குத் தெரியாது. உறவினர் என்ற முறையில் பார்க்க வந்தேன்," என்றார்.
இதனிடையே, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினி நலமாக இருப்பதாகவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், "ரஜினிகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றார்.