சென்னை: தீபாவளிக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில், ரயில் பயணிகள் தங்களுடன் பட்டாசுகளை எடுத்துச்செல்வதற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதையும் மீறி, பட்டாசுகளை எடுத்துச்சென்றால் ரூ.1,000 அபரா தமும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ரயில் நிலையங்களின் அனைத்து நுழைவாயில்களிலும் 'மெட்டல் டிடக்டர்' உதவியுடன் பயணிகளின் உைடமைகளைச் சோதிக்கும் பணியில் ரயில்வே போலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.
வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், தமிழகம் எங்கும் புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் வாங்க மக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
இதனால், கடந்த 24ஆம் தேதி முதல் சென்னை ரயில்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இதையடுத்து, இப்போது முதல் நவம்பர் 5ஆம் தேதிவரை சென்னை புறநகர் மின்சார ரயில்களிலும் விழுப்புரம், அரக்கோணம், கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளியூர், வெளிமாநிலங் களுக்குச் செல்லும் ரயில் பயணிகள் பட்டாசுகளை எடுத்துச்செல்ல அதிக வாய்ப்பு இருப்பதால், ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டி நெறி முறைகளை வெளியிட்டுள்ள தமிழக சுகாதார அமைச்சு, பட்டாசு வெடிக்கும் முன்பு எந்தவொரு கிருமிநாசினியையும் பயன்படுத்தவேண்டாம் என கூறியுள்ளது.
"காலணி அணிந்து திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்கலாம். மின்கம்பங்கள் அருகே வெடிக்கக்கூடாது. முழுமையாக வெடிக்காத பட்டாசுகள் மீது தண்ணீர் ஊற்றி அணைக்கவேண்டும்.
"பட்டாசு வெடித்த பின்பு கைகளைக் கழுவவேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, பண்டிகைக் காலங்களில் வணிக வளாகம், அங்காடிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சென்னை மாநகராட்சி, கொரோனா விதிமுறையை மீறிய கடைகள், தனிநபர்களிடம் இருந்து கடந்த மே மாதம் முதல் இம்மாதம் 25ஆம் தேதி வரை ரூ.4 கோடியே 93 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.