செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
d1510020-2a31-4023-b607-48989a702b92
இழந்த பணத்தை மீட்டுத் தரும்படி கோரிய மக்கள்.படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

சீட்டு நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி; பொதுமக்கள் புகார்

ஈரோடு: ஈரோட்டில் சீட்டு நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டுத் தலைமறைவானவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இம்மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர்.

ஈரோடு, அசோகபுரத்தைச் சேர்ந்த வள்ளல் பாபு என்பவர், ஐந்து நட்சத்திர சோப்பு தயாரிப்பு நிறுவனம், சீட்டு நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார். சோப்பு ஆலை, வீடு ஆகியவற்றை மற்றவரிடம் கைமாற்றிவிட்டு தலைமறைவான வள்ளல் பாபு குறித்து மக்கள் புகார் அளித்துள்ளனர்.

நன்மாறனுக்கு முதல்வர் அஞ்சலி

மதுரை: மதுரை கிழக்குத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ நன்மாறன், 74, மூச்சுத் திணறலால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.

'மேடை கலைவாணர்' என்று அழைக்கப்படும் நன்மாறன் 2001, 2006 என இருமுறை எம்எல்ஏவாக தேர்வானவர். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். சொந்த வீடு கூட இல்லாமல் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த இவர், மார்க்ஸ், லெனின் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் குறித்த புத்தகமும் எழுதி உள்ளார். நேற்று அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

கரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவில் முட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புழுக்கள் இருந்த முட்டைகளை வழங்கிய சத்துணவு அமைப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

கவுண்டம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையில் புழுக்கள் இருந்ததாக அண்மையில் புகார் எழுந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து, உரிய விளக்கம் கேட்டு நேற்று ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

மதுரை: ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாெமாழி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காலையில் இருந்து மாலை வரை முழு நேரமும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமரவைக்க வேண்டும். பள்ளிகளில் வழக்கம்போல் சத்துணவு வழங்கப்படும்," என்றார்.

இரு மேம்பாலங்கள் திறப்பு

சென்னை: நவம்பர் 1ஆம் தேதி முதல் சென்னை கோயம்பேடு, வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது சென்னை கோயம்பேடு, வேளச்சேரியில் மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பணிகள் தற்போதுதான் முடிந்துள்ளன.